2024 பொதுத் தேர்தல்: அநுர தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள புதிய முகங்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மாணவர் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள் எனப் பல புதிய முகங்களை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினருமான நளின் ஹேவகே (Nalin Hewage) தெரிவித்துள்ளார்.
இவர்கள் நீண்டகாலமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் பொது அரங்கிற்கு வராதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தந்தை, மகன்கள் இல்லாத, செல்வந்த குடும்பம் மற்றும் கடத்தல்காரர்கள் இல்லாத மிகவும் புத்திசாலித்தனமான குழுவிற்கு போட்டியிட தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் நளின் ஹேவகே சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்காளர்களுக்கான சந்தர்ப்பம்
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் விருப்பு வாக்குகள் இன்றி ஒரே குழுவாக தேர்தலில் போட்டியிடுவார்கள் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.