வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும். மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தல்
பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும் . அத்துடன் சில நியாயமான கொள்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கம் வலியுறுத்துகின்றது, என மார்ச் 12 இயக்கச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் (05.10.2024) யாழ் மாவட்டத்தில் மார்ச் 12 இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் பவ்ரல் அமைப்பின் கள இணைப்பாளர் சசீஸ்காந்த் அவர்களுக்கும் இடையில் கே. கலாராஜ் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சில தகைமைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் – குற்றவியல் தவறுகளற்ற, இலஞ்ச ஊழலற்ற ஒருவராக இருத்தலுடன் மது ,போதைப் பொருள், சூது, ஆகிய சமூக சீரழிவுமிக்க வியாபார நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்களாகவும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்காதவர்களாகவும் இருப்பது அவசியம்.
சுற்றுச்சூழல் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவர்களாகவோ, நாட்டுக்கு குந்தகம் விளைவித்த நிதிசார் ஒப்பந்தங்களின் பங்கு தாரராகவோ இருந்திருக்கக் கூடாது.
வேட்பாளர்கள் நியமனம் பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்லது தாக்கல் செய்த பின்னர் தாம் மார்ச் 12 இயக்கத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வது பற்றி பகிரங்கமாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அதாவது ,*தாம் கடந்த காலத்தில் மேற் குறிப்பிட்ட முறைகேடான செயல்களை செய்ததில்லை எனவும் அவ்வாறான செயல்களை ஊக்குவிக்கவோ அல்லது உடந்தையாகவோ இருக்கவில்லை எனவும், வருங்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவ்வாறான செயல்களை செய்யப்போவதில்லை,எனவும் இவ்வாறான செயல்களை புரிவோருக்கு உடந்தையாகவோ ஊக்குவிப்பாளராகவோஇருக்கப்போவதில்லை எனவும் பொதுமக்களுக்கு இந்த வேட்பாளர்கள் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும் ஆகிய கட்டாய தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச் சந்திப்பில் சமூக அரசியல் சார் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.