இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரத்தின் மீது ஹிஸ்புல்லா குண்டு மழை!
லெபனானில் (Lebanon) தனது தாக்குதலை விரிவுபடுத்த இஸ்ரேல் தயாராகியுள்ள நிலையில், இஸ்ரேலின் (Israel) மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
காசா மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவி , பிராந்திய யுத்தம் பற்றிய அச்சத்தை எழுப்பியுள்ள போதும், இஸ்ரேலியர்கள் ஒக்டோபர் 7 தாக்குதலின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நிகழ்வுகளை போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
135 ஏவுகணைகள்
இந்த நிலையில், ஹமாஸ் சார்பான ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, ஹைஃபாவின் தெற்கே உள்ள இராணுவ தளத்தை “Fadi 1” ஏவுகணைகளால் குறிவைத்து 65 கிமீ (40 மைல்) தொலைவில் உள்ள Tiberias மீது தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, ஹைஃபாவின் வடக்குப் பகுதிகளையும் ஏவுகணைகளால் குறிவைத்ததாக ஹிஸ்புல்லா அறிவித்து இருக்கிறது.
இதன் படி, திங்களன்று மாலை 5 மணி (1400 GMT) நிலவரப்படி சுமார் 135 ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இழப்புக்கள்
குறித்த தாக்குதல் காரணமாக ஹைஃபா பகுதியில் 10 பேரும், மத்திய இஸ்ரேலின் தெற்கில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது விமானப்படை விரிவான குண்டுவீச்சுகளை நடத்தி வருவதாகவும், இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.