உணவுத் தட்டுப்பட்டால் ஏற்படும் நோய்: கனேடிய மருத்துவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
பல நூறு ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை நோய் ஒன்றைக் குறித்து கவனம் செலுத்த கனேடிய மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அரிய வகை நோய்
சில ஆண்டுகளுக்கு முன் சுவிஸ் சிறுவன் ஒருவன் கடுமையான முதுகுவலி மற்றும் கால் வலியால் அவதியுற்று ஜெனீவா பல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவர்கள் அவனுக்கு தொற்றுநோய் அல்லது மரபியல் நோய் ஏதாவது உள்ளதா என பரிசோதித்தார்கள். அப்படி ஒரு பிரச்சினையும் அவனுக்கு இல்லை என்பது தெரியவந்தது.
அவனது கால் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவனுக்கு பழங்கால நோயான ஸ்கர்வி என்னும் நோய் இருக்கக்கூடுமா என சந்தேகித்த மருத்துவர்கள், அவனை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தினார்கள்.
மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த ஐந்து வயது சிறுவனுக்கு ஸ்கர்வி என்னும் நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
இந்த ஸ்கர்வி நோய் வைட்டமின் C குறைபாடு காரணமாக உருவாகும் பிரச்சினையாகும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் கப்பல்களில் நீண்ட காலம் பயணிக்கும் பணியாளர்கள் பலர் உயிரிழந்துவந்த நிலையில், அவர்களது எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அவர்களுக்கு ஸ்கர்வி பாதிப்பு ஏற்பட்டு, அதனால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சுவிஸ் சிறுவனும் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண மறுத்துவந்துள்ளான். ஆகவே, அவனுக்கு வைட்டமின் C குறைபாடு ஏற்பட்டுள்ளது.
கனேடிய மருத்துவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
தற்போது, இந்த ஸ்கர்வி நோய் குறித்து கவனம் செலுத்த கனேடிய மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதாவது, ஸ்கர்வி நோய், வைட்டமின் C குறைப்பாட்டால் ஏற்படும் ஒரு நோயாகும். ஆரஞ்சு வகை பழங்கள், பிரக்கோலி போன்ற காய்கறிகள், பசலைக்கீரை போன்ற கீரைகள் ஆகியவற்றில் வைட்டமின் C போதுமான அளவில் உள்ளது.
கனடாவைப் பொருத்தவரை, உணவுத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த ஸ்கர்வி நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
குறைந்த வருமானம் காரணமாக உணவைத் தவிர்ப்போர், சத்துள்ள உணவை உண்ணாமல், கடமைக்கு உண்ணுவோர், குறைந்த வருவாய் கொண்ட, தனியாக வாழும் முதியவர்கள் ஆகியோருக்கு இந்த ஸ்கர்வி பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு, ரொரன்றோ மருத்துவமனை ஒன்றில், 65 வயது பெண் ஒருவருக்கு ஸ்கர்வி கண்டறியப்பட்டது.
தனியாக வாழ்ந்துவரும் அவர், குடும்பத்தார் உதவி எதுவும் இல்லாததாலும், அதிகம் நடமாட முடியாததாலும், கேன்களில் அடைக்கப்பட்ட சூப், பதப்படுத்தப்பட்ட சீஸ், வெள்ளை பாண் ஆகியவற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்துவந்துள்ளார்.
பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளை அவர் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
ஆகவே, ஸ்கர்வி தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட Dr. Sally Engelhart என்னும் மருத்துவர், உணவுத் தட்டுப்பாடு என்னும் விடயம் அதிகரித்துவரும் நிலையில், கனடாவில் மருத்துவர்கள் இனி ஸ்கர்வி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சரியான சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த ஸ்கர்வி நோயால் உடலுக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.