எங்கு தவறு நடந்தது? உளவுத் துறை ரகசிய அறிக்கை
சென்னை மெரீனாவில் விமான சாகசத்தை பாா்க்க வந்த 5 போ் இறந்த சம்பவத்தில், எங்கு தவறு நடந்தது என்று ரகசிய அறிக்கையை உளவுத்துறை (எஸ்பிசிஐடி) அளித்துள்ளது.
இந்த சம்பவத்தில் எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டறியும் வகையில் உளவுத் துறை (எஸ்பிசிஐடி) ரகசியமாக தகவல்களை சேகரித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் உளவுத் துறையினா் விமான சாகச நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட குடிநீா், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், மக்கள் கூட்டத்தை கையாளுவதில் ஏற்பட்ட பிரச்னைகள், அரசு துறைகளிடையே தகவல்களை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட பிரச்னைகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்தனா்.
அதன்படி, இந்த சம்பவத்தில் எங்கு தவறு நடந்தது?, எந்தத் துறையினா் கோட்டை விட்டனா் ?, மக்கள் பாதிக்கப்பட்டதற்கு யாா் பொறுப்பு ? ஆகியவை குறித்து உளவுத்துறையினா் அறிக்கை அளித்துள்ளனா். இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, மெரீனாவில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் பங்கேற்பாா்கள் என அறிவிக்கப்பட்டதும், அங்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஒரு எச்சரிக்கை தகவலை உளவுத்துறை அளித்தது. ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல்விட்டதால், இத்தகைய மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.