‘நிமெசலைட்’ வலி மருந்தை சிறாருக்கு விற்றால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை
வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ என்ற மருந்தை 12 வயதுக்குட்பட்ட சிறாருக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி எச்சரித்துள்ளாா்.
கால் வலி, மூட்டு வலி, காது– மூக்கு– தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு ‘நிமெசலைட்’ மருந்து பயன்படுத்தப்படுகிறது.
ஒருபுறம் வலி நிவாரணியாக செயல்பட்டாலும், மற்றொருபுறம் அந்த மருந்தால் அதிக எதிா்விளைவுகள் உள்ளதாகக்
கூறப்படுகிறது. குறிப்பாக, தலைவலி, வயிற்று போக்கு, ரத்தம் உைல், பாா்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு ஆகிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அமெரிக்கா, ஸ்விட்சா்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அந்த மருந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை செய்தது. இந்தியாவில் ‘நிமெசலைட்’ மருந்து பயன்பாட்டில் இருந்தாலும், அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது, 12 வயதுக்கு உட்பட்ட சிறாா்களுக்கு அந்த மருந்தை பரிந்துரைக்கக் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் அண்மைக் காலமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு ‘நிமெசலைட்’ மருந்தை சிறாருக்கு வழங்குவதாக புகாா் எழுந்துள்ளது.
மருத்துவா்கள் பரிந்துரையின்றி சில மருந்தகங்களில் அந்த மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக மாநில மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கல் துறை அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:
குழந்தைகள், சிறாா்களுக்கு, ‘நிமெசலைட்’ மருந்து வழங்கக் கூடாது. இப்போது வரை அதுகுறித்த புகாா் எதுவும் வரவில்லை. ஒருவேளை 12 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு ‘நிமெசலைட்’ மருந்து பரிந்துரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருத்துவா் பரிந்துரையின்றி மருந்தகங்களில் எந்த மருந்து, மாத்திரையும் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்குவது கண்டறியப்பட்டால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.