ஜம்மு – காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ், பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி! – முழு விவரம்!
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில அந்தஸ்து நீக்கம், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் தேர்தல் என பல முக்கிய விஷயங்களை உள்ளடக்கி 2024 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை. இந்நிலையில், இந்த 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தனியேவும் களம் கண்டன.
மூன்று கட்டங்களாக நடைபெற்றத் தேர்தலில் மொத்தம் 63.45% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று (8ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா பத்கம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த இரண்டிலும் அவர் வெற்றி பெற்றார்.
அதேபோல் ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குமான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜம்மு காஷ்மீரில், இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகள், காங்கிரஸ் 6 தொகுதிகள், சி.பி.எம். 1 தொகுதி என வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல் தனித்து களம் கண்ட பா.ஜ.க. 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தலில் மிக முக்கியமாக ஆம் ஆத்மி கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 7 இடத்திலும், இதர கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளன.