;
Athirady Tamil News

புளோரிடாவை தாக்கும் மில்டன் புயல்! மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு பைடன் அறிவுறுத்தல்

0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில்,பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.

அத்துடன், மில்டன் சூறாவளியானது கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவில் வீசும் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மில்டன் சூறாவளியானது புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரையை உள்ளூர் நேரப்படி புதன்கிழமை(09) மாலைக்குள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹெலேன் சூறாவளியின் பேரழிவிலிருந்து ஏற்கனவே தத்தளிக்கும் பகுதிகளில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மக்களை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல்
இதேவேளை, புளோரிடாவின் மேற்குக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் சூறாவளி எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வெளியேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில், வெளியேற மறுக்கும் மக்கள் கட்டாயம் மரணத்தை சந்திப்பீர்கள் என தம்பா மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புளோரிடா மாகாணத்தின் மேற்குக் கரையோர மக்கள் நேற்று(08) மில்டன் சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சூறாவளியில் சிக்காமல் இருக்க ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறியதால், பிரதான சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மில்டன் புயலானது மெக்சிகன் நகரமான மெரிடாவைக் கடந்து புளோரிடாவை அணுகி வடக்கு அமெரிக்காவை நோக்கி நகர்வதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், காற்றின் வேகம் மணிக்கு 250 கி.மீற்றர் என இருக்கும் என்றும் புயலின் தாக்கம் 15 அடி வரையில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், மேற்கு – மத்திய புளோரிடாவில் பதிவாகியுள்ள மிக அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாக மில்டன் இருக்கும் என்றும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.