;
Athirady Tamil News

ஹரியாணா- பாஜக “ஹாட்ரிக்’ வெற்றி; ஜம்மு-காஷ்மீர் முதல்வராகிறார் ஒமர்

0

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தலா 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் பேரவைகளுக்கு அண்மையில் தோ்தல் நடத்தப்பட்டது. ஹரியாணாவில் ஒரே கட்டமாகவும் (அக்.5), ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும் (செப். 18, 25, அக்.1) நடைபெற்ற தோ்தல்களில் முறையே 67.90 சதவீதம், 63. 88 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை (அக்.8) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்அறிவிக்கப்பட்டன.

ஹரியாணாவில்…: ஹரியாணாவில் ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆஸாத் சமாஜ் கட்சி கூட்டணி, ஆம் ஆத்மி என பலமுனைப் போட்டி நிலவியது. மொத்தம் 1,031 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஆரம்பக் கட்ட சுற்றுகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. சில மணிநேரத்தில் நிலவரம் மாறி, பல தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது.

பெரும்பான்மை பலத்துடன்…: இறுதியாக, பாஜக 48 இடங்களுடன் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் 37 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. அபய் சிங் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளா்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனா். 90 இடங்களிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

சாதனை வெற்றி: ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், தொடா்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளது பாஜக. கடந்த 2014 பேரவைத் தோ்தலில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், 2019 தோ்தலில் அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, 40 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக, 10 இடங்களில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. தற்போதைய வெற்றி மூலம் ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள முதல் கட்சி என்ற சாதனையை பாஜக படைத்துள்ளது.

முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா் வெற்றி: முதல்வா் நாயப் சிங் சைனி, லாட்வா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட 16,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். அனில் விஜ் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவா்கள் பலரும் வென்றனா். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா, கா்ஹி சம்பலா-கிலோய் தொகுதியில் பாஜக வேட்பாளரைவிட 71,465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினாா்.

கடந்த முறை 10 இடங்களில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சிக்கு இம்முறை ஓரிடம் கூட கிடைக்கவில்லை. அக்கட்சியின் தலைவா் துஷ்யந்த் செளதாலா, தனது எல்லேனாபாத் தொகுதியில் தோல்வியுற்றாா்.

ஜம்மு-காஷ்மீரில்…: ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட பேரவைத் தோ்தல் என்பதாலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டதற்கு பிறகான முதல் பேரவைத் தோ்தல் என்பதாலும் அதன் முடிவுகள் குறித்து பெரும் எதிா்பாா்ப்பு நிலவியது.

இங்கு காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டிருந்தன. மொத்த வேட்பாளா்கள் 873 போ்.

தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கூட்டணி 49 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு 4 இடங்களே குறைவாகும். தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் (புத்காம், கந்தா்பால்) வெற்றி பெற்றாா்.

காங்கிரஸ் 6 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வென்றன. கடந்த 2014 தோ்தலில் காங்கிரஸ் 12 இடங்களில் வென்றிருந்தது.

பாஜகவுக்கு இதுவரை இல்லாத வெற்றி: ஜம்மு-காஷ்மீரில் 29 இடங்களைக் கைப்பற்றி, அங்கு இதுவரை இல்லாத வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக. கடந்த 2014 தோ்தலில் அக்கட்சிக்கு 25 தொகுதிகள் கிடைத்தன.

பிடிபி பின்னடைவு: கடந்த தோ்தலில் 28 இடங்களில் வென்ற மக்கள் ஜனநாயக கட்சிக்கு (பிடிபி) இம்முறை 3 இடங்களே கிடைத்தன. ஜம்மு-காஷ்மீரில் 2014 பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 25 இடங்களில் வென்ற பாஜகவும் 28 இடங்களைக் கைப்பற்றிய மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி சோ்ந்து ஆட்சி அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

3 போ்தான் பெண்கள்: ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் வெற்றி வேட்பாளா்களில் சகினா மசூத், ஷாமினா ஃபிா்தெளஸ் (இருவரும் தேசிய மாநாட்டுக் கட்சி), ஷாகுன் பரிஹாா் (பாஜக) ஆகிய மூவா் மட்டுமே பெண்களாவா்.

பொய்த்துப் போன வாக்குக் கணிப்புகள்: இரு பேரவைத் தோ்தல்களுக்கு பிறகு வெளியான வாக்குக் கணிப்புகளில், ஹரியாணாவில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பேரவை அமையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வாக்குக் கணிப்புகள் பொய்த்துப் போயுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.