அடேங்கப்பா..வேலைக்கு விண்ணப்பித்த பெண் – 48 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பதில் கடிதம்!
பிரிட்டனில் 70 வயதான பெண் ஒருவர் விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது வேலைக்கான அழைப்பைப் பெற்றுள்ளார்.
பொதுவாக நாம் நிறுவனங்களில் வேலை சேரும் போது நேர்காணல் நடத்தப்பட்டு அதில் தேர்வானால் மட்டுமே வேலைக்கான அழைப்பைப் பெற முடியும்.
அப்படி பிரிட்டனில் வசித்து வந்த டிசி ஹாட்சன் என்பவர் 1976 ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடர் ஆக வேண்டும் என்ற கனவோடு ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பி இருக்கிறார்.
அதற்கு அந்த நிறுவனம் அப்போதே பதில் கடிதம் அனுப்பிய நிலையில், அது தபால் நிலையத்தில் அலமாரியின் பின்னால் சிக்கி கேட்பாறற்றுக் கிடந்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது தபால் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் இந்த கடிதத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கடிதம் டிசி ஹாட்சனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட டிசி ஹாட்சன் கூறியிருப்பதாவது:”நான் லண்டனில் உள்ள என் குடியிருப்பில் அமர்ந்து கடிதம் எழுதியதை மிகத் தெளிவாக நினைவுபடுத்துகிறேன்”தினமும் என் தபால் பெட்டியைப் பார்த்தேன்.
ஆனால் அங்கே எதுவும் இல்லை. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், ஏனெனில் நான் உண்மையிலேயே, மோட்டார் சைக்கிள் சாகச ஓட்டுநராக இருக்க விரும்பினேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் இவ்வளவு காலத்திற்குப் பிறகு கடிதத்தைப் பெறுவது நம்பமுடியாதது.
நான் 50 முறைக்கு மேல் வீடுகளை மாற்றிவிட்டு வெவ்வேறு நாடுகளுக்கு நான்கு அல்லது ஐந்து முறை இடம்பெயர்ந்த பிறகு அவர்கள் என்னை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது இன்னும் ஆச்சரியமாக உள்ளது என்று கூறினார்.