ராகுல் ஜிலேபி கொடுத்தார்.. ஆனால் மக்கள் அல்வா கொடுத்து விட்டார்கள் – தமிழிசை கேலி!
ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
தமிழிசை கேலி
பாஜக தலைமை அலுவலகத்தில் ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “இரண்டு மாநில வெற்றியை கொண்டாட வந்துள்ளோம். ஏன் இரண்டு மாநில வெற்றி என்று கூறுகிறோம் சொன்னால் ஹரியானாவில் கண்டிப்பாக வெற்றி. அதே போல ஜம்முவிலும் வெற்றி தான்.
எப்படி வெற்றி என்றால் அங்கு தேர்தல் நடத்தியதே வெற்றிதான். 10 ஆண்டுகளுக்கு பிறகும், 370 சட்டபிரிவை நீக்கிய பிறகு வரும் தேர்தல், தீவிரவாதம் ஒடுக்கப்பட்ட பின்பு பாஜகவினால் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்துள்ளனர்.
குறைவான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, கூட்டணி கட்சிகள் தான் அதிகமாக பெற்றுள்ளது. ஆனால் பாஜக பலமான கட்சியாக அங்கு உருவெடுத்துள்ளது. கருத்து கணிப்புகள் பொய்யாக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பை வைத்துக்கொண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள்.
ஹரியானாவில் முதலில் காங்கிரஸ் முன்னிலையில் வந்தவுடன் கட்சி அலுவலகத்தில் ராகுல் ஜிலேபி எனக் கொடுத்தார்கள். அதன்பின்பு மக்கள் அல்வா கொடுத்து விட்டார்கள். நாங்கள் எவ்வாறு முதலில் வருவது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் முதல்வர் யார் என்று சிந்தித்தார்கள்.
நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற மிதப்பில் இருந்தார்கள். பாஜகவால் ஜெயிக்கவே முடியாது என கூறப்பட்ட இடத்தில் அந்த மாநிலத்திற்கான திட்டங்களை தயாரித்து, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களைக் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளோம்.
ஜாட் மக்கள் இருக்கக்கூடிய இடங்களில் கூட பாஜக வெற்றி பெற்றுள்ளது. சமூக பொறியியலை சரியாக எடுத்துச் சென்று, மக்களுக்கான திட்டங்களை அறிவித்து, காங்கிரஸ் ஏழு கேரண்டிகளைக் கொடுத்தாலும் மோடியின் கேரண்டி தான் பெருசு என்று மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
இந்த வெற்றியை பாரதப் பிரதமர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இந்த வெற்றி தமிழக பாஜகவிற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஹரியானாவில் 2009இல் பாஜக பெற்றது எம்எல்ஏ 4 தான். ஹரியானாவில் 3 முறை ஆட்சிக்கு வந்த பாஜகவினால் தமிழகத்திலும் பலம்
பொருந்திய கட்சியாக உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காஷ்மீரில் பாரூக் அப்துல்லாவின் கட்சியும் காங்கிரஸும் கொள்கை முரண் உடையது. காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. கவலை அளிக்கக்கூடிய கட்சியாகக் காங்கிரஸ் இருக்கிறது. பாஜகவின் வெற்றி தொடரும். என்று தெரிவித்துள்ளார்.