லண்டனில் 16 வயது சிறுவன் கொலை! சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில்(London) 16 வயது சிறுவனை கடுமையாக தாக்கி, கொலை செய்த வழக்கில் 17 வயது சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கொலைச் சம்பவம் கடந்த ஆண்டு(2023) ஜூலை மாதம் 9ஆம் திகதி வெஸ்ட் ஹார்ம் பார்க்(West Ham Park) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சட்ட விதிமுறைகளுக்காக பெயர் வெளிப்படுத்தப்படாத அந்த 17 வயதுடைய சந்தேக நபர் ரஹான் அகமது அமீன் என்பவரின் மார்பை கூறிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
சம்பவ தினத்தன்று பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ரஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறு நாள் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து, குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட 17 வயது நபருக்கு ஓல்ட் பெய்லி நீதிமன்றம் குறைந்தது 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நீளமான சிவப்பு கத்தி, கை ரேகை மற்றும் ரஹானின் இரத்தக்கறையுடன் சம்பவம் நடந்த பகுதியிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் ஜூன் 12ஆம் திகதி பெற்றோரின் அடையாள அட்டையை பயன்படுத்தி இணையமூடாக கத்தியை வாங்கியதும் விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
இதேவேளை, தற்காப்புக்காக கத்தியை பயன்படுத்தியதாக முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் தாக்குதல்தாரிக்கு எதிராகவே அனைத்து ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.