ஒரே ஒரு காரணம்… சார்லஸ் மன்னரை நேரில் சந்திப்பதை ரத்து செய்த ரத்தன் டாடா
தொண்டு சேவைகளுக்காக பெரிதும் கொண்டாடப்படும் ரத்தன் டாடா, முன்னர் சார்லஸ் மன்னர் அளிக்கவிருந்த உயரிய விருதை ஏற்க மறுத்துள்ளார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
தொண்டு சேவைகளுக்காக பெரிதும் கொண்டாடப்படும் பெரும் கோடீஸ்வரர் ரத்தன் டாடா விலங்குகள் நலனுக்காகவும் சிறப்பு கவனம் செலுத்தியவர். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விடயம், ரத்தன் டாடா பிரித்தானிய அரச குடும்பத்தின் மதிப்புமிக்க கவுரவத்தை நிராகரித்தார் என்பது.
தற்போதைய பிரித்தானிய மன்னரும் அப்போதைய வேல்ஸ் இளவசரருமான சார்லஸ் கடந்த 2018ல் ரத்தன் டாடாவின் சிறப்பான தொண்டு நிறுவன சேவைகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கௌரவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை நடத்திய விருது வழங்கும் விழா, பிப்ரவரி 6ம் திகதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற இருந்தது. விழாவில் கலந்துகொண்டு விருதைப் பெற ரத்தன் டாடாவும் ஒப்புக்கொண்டிருந்தார்.
ஆனால் ரத்தன் டாடா லண்டன் கிளம்பும் நாள் நெருங்கி வந்த நிலையில், தனது முடிவை மாற்றிக்கொள்ளும் மிக சிக்கலான முடிவை எடுத்தார். அதற்கு காரணம் அவரது வளர்ப்பு நாய் நோய்வாய்ப்பட்டதுடன் ஆபத்தான கட்டத்தில் இருந்தது.
லண்டன் புறப்பட முடியாது
இதனால் சார்லஸ் ஒருங்கிணைத்துள்ள விருது விழாவை ரத்து செய்துவிட்டு, தமது செல்ல நாயை கவனிக்க அவர் முடிவு செய்தார். டாடாவுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள லண்டன் சென்றவர்களில் ஒருவர் தொழிலதிபரான சுஹேல் சேத்.
6ம் திகதி விழாவிற்காக 2ம் திகதி லண்டன் சென்றுள்ளார் சுஹேல் சேத். லண்டனில் அவர் தரையிறங்கியதும் ரத்தன் டாடாவிடம் இருந்து 11 முறை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளதை சுஹேல் கவனித்துள்ளார்.
உடனையே அவர் ரத்தன் டாடாவை தொடர்பு கொண்டுள்ளார். ரத்தன் டாடா தமது நிலையை விளக்கியுள்ளார். மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் தமது நாயை விட்டுவிட்டு லண்டன் புறப்பட முடியாது என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் வேல்ஸ் இளவரசர் சார்லசுக்கு தெரியவர, அவர் ரத்தன் டாடா குறித்து பெருமையாக பேசியதாக சுஹேல் சேத் காணொளி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.