மில்டன் புயலை துரத்திய விமானம்… இதயம் நின்று போன தருணம்: அடுத்து நடந்த பதறவைக்கும் சம்பவம்
புயலை ஆய்வு செய்யும் குழு ஒன்று விமானத்துடன் மில்டன் புயலின் நடுவே சிக்கி, உயிர் தப்பிய பதறவைக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது.
விமானத்துடன் மில்டன் புயலில்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்னும் சில மணி நேரத்தில், மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் மில்டன் புயல் தாக்க உள்ளது. புயலின் தாக்கம் 15 அடி வரையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே புயலை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் குழு ஒன்று தங்கள் விமானத்துடன் மில்டன் புயலில் சிக்கிக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
Miss Piggy என பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் செவ்வாய்க் கிழமை காலை தம்பா நகரம் நோக்கி நகரும் மில்டன் சூறாவளி குறித்த தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, அந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புயலில் சிக்கிய விமானம் மிக மோசமாக தத்தளிக்க, விஞ்ஞானிகள் உயிருக்கு போராடியுள்ளனர். பலத்த காற்றும் கன மழையும் விமானத்தை கடுமையாக தடுமாற வைத்துள்ளது. ஆனால் ஒருவழியாக புயலில் இருந்து தப்பியதாகவே கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காற்றின் வேகம் மணிக்கு 180 மைல்கள் என வீசிய நிலையில், அதன் பின்னர் மணிக்கு 160 மைல்கள் என குறைந்துள்ளது. Miss Piggy விமானமானது புயலுக்குள் புகுந்து காற்றின் வேகம், வெப்பநிலை, அழுத்தம் மற்றும் ஈரப்பதத்தை அளவிட தரவுகளை சேகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
100 ஆண்டுகளில் இல்லாத
இந்த விமானம் மற்றும் விஞ்ஞானிகள் சேகரிக்கும் தரவுகளே பின்னர் உரிய அதிகாரிகளால் மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. மட்டுமின்றி, புயலின் உக்கிரம் மற்றும் எங்கே புயல் தாக்கக்கூடும் உள்ளிட்ட தகவல்களும் கணிக்கப்படுகிறது.
மில்டன் புயல் இதே நிலையில் நகரும் என்றால், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பாதிப்பை தம்பா நகருக்கு ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.
டிஸ்னி வேர்ல்ட் மற்றும் ஆர்லாண்டோவில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோக்கள் புயலுக்கு தயாராகும் வகையில் மூடப்பட உள்ளன. மில்டன் புயலானது தற்போது தம்பாவில் இருந்து தென்மேற்கே 405 மைல் தொலைவில் உள்ளது மற்றும் வளைகுடாவை கடந்து உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு நகருக்கு தெற்கே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்மட்டம் 15 அடி வரையில் அதிகரிக்கும் என்பதால், குடியிருப்புகள் மொத்தமாக நீருக்குள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.