1.5 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை கொள்ளையிட்ட மூவர் கைது: கனடாவில் சம்பவம்
கனடாவில்(Canada) சுமார் 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர வாகனங்களை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கொள்ளைச் சம்பவம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கைது நடவடிக்கையானது சந்தேக நபர்கள் தொடர்பாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் கொள்ளையிட்ட பல வாகனங்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கை
இதன்போது, 22 வயதான கோடி வொட்ஸ், 28 வயதான பிராண்டன் ஹுன்டன் மற்றும் 24 வயதான சவான்னா ச்சேவாஸ் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 2 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கைதான சந்தேக நபர்கள் ஆடம்பரமான 13 வாகனங்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து பொருள் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர்கள் வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பீல் பிராந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.