சுயநினைவின்றி இருந்த சீக்கியரிடம் கலாச்சார விதிமீறல்: மன்னிப்புக் கேட்ட கனடா மருத்துவமனை
கனடா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சீக்கியர் ஒருவரின் அனுமதியின்றி அவரது தாடி சவரம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், நடந்த தவறுக்காக மருத்துவமனை மன்னிப்புக் கோரியுள்ளது.
கலாச்சார விதிமீறலால் எழுந்த சர்ச்சை
கனடாவின் பிராம்ப்டனில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார், ஜோஹிந்தர் சிங் (Joginder Singh Kaler, 85).
ஜோஹிந்தர் சீக்கிய கொள்கைகளை கடுமையாக பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சீக்கியர்களின் கொள்கைகளில் ஒன்று தங்கள் தாடியை அவர்கள் மழிக்கக்கூடாது என்பதாகும்.
ஆனால், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள் ஜோஹிந்தரின் தாடியை மழித்துள்ளார்கள்.
அவர் சுயநினைவின்றி இருந்ததால் அவர்கள் அவரிடம் அனுமதி கோரியிருக்க வாய்ப்பில்லை. அவருடைய உறவினர்களிடமும் யாரும் அனுமதி கோரவில்லையாம்.
ஆக, அனுமதியின்றி ஜோஹிந்தரின் தாடியை சவரம் செய்ததால் சீக்கிய சமுதாய அமைப்பினர் வருத்தமடைந்துள்ளார்கள்.
இது கலாச்சார விதி மீறல் என சீக்கிய அமைப்புகள் கூறியுள்ள நிலையில், அது தொடர்பாக முழுமையான மீளாய்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்திருந்தது.
மன்னிப்புக் கேட்ட கனடா மருத்துவமனை
இந்நிலையில், ஒன்ராறியோ மருத்துவ அமைப்பின் தலைவர்கள், நடந்த தவறுக்கு பொறுப்பேற்பதாகவும், மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று, இந்த விடயம் தொடர்பில், பிராம்ப்டன் William Osler மருத்துவ அமைப்பின் தலைவரும், முதன்மை செயல் அலுவலருமான Dr. Frank Martino என்பவரும், நிர்வாகக் குழுவிலுள்ளவரான Pardeep Singh Gill என்பவரும் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளார்கள்.
மருத்துவ அத்தியாவசியம் எதுவும் இல்லாத நிலையிலும், அனுமதியுமின்றி, சீக்கிய நோயாளி ஒருவரின் தாடியை மழித்ததால், அவரது கலாச்சார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறிவிட்டோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடந்த தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்பதுடன், சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினரிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்துடன், சீக்கிய சமுதாயத்திடமும் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ள அவர்கள், எங்களால் நடந்த தவறை சரி செய்ய முடியாது என்றாலும், அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் மூலம், மீண்டும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தவிர்க்க தேவையான மாற்றங்களை மேற்கொள்கிறோம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.