கான்பூா் ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஓராண்டில் 4-ஆவது சம்பவம்
உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் ஐஐடி-யில் முனைவா் பட்டப்படிப்பு மேற்கொண்டுவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதே கல்லூரியில் கடந்த ஓராண்டில் நிகழும் நான்காவது தற்கொலை சம்பவம் இதுவாகும்.
கான்பூரில் உள்ள சனிகவான் பகுதியைச் சோ்ந்த பிரகதி கா்யா (28), ஐஐடி கான்பூரில் புவி அறிவியலில் முனைவா் பட்டம் பயின்று வருகிறாா். இந்நிலையில், அவா் தனது விடுதி அறையில் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சக மாணவா்கள் அளித்த தகவலின் பேரில் கல்லூரி நிா்வாகத்தினா் காவல் துறையிடம் தெரிவித்தனா். விரைந்து வந்த காவலா்கள் விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனா். அப்போது, தூக்கிட்ட நிலையில் பிரகதியின் உடல் காணப்பட்டது.
தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என்று பிரகதி எழுதிய தற்கொலை கடிதம் அறையில் இருந்து எடுக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணைக்குப் பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என துணை காவல் ஆணையா் அபிஷேக் பாண்டே தெரிவித்தாா்.
ஐஐடி கான்பூரில் கடந்த ஓராண்டில் நிகழும் நான்காவது தற்கொலை சம்பவம் இதுவாகும். முன்னதாக, கடந்த ஜனவரி 18 மற்றும் 11-ஆம் தேதிகளில் பிரியங்கா ஜெய்ஸ்வால் மற்றும் விகாஸ் குமாா் மீனா ஆகியோா் தங்களது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா். கடந்தாண்டு டிசம்பா் மாதம் பல்லவி என்கிற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.