இளநிலை மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டம்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை இளநிலை மருத்துவா்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் 7-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (அக். 11) நீடிக்கிறது.
பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டும், மாநில சுகாதாரத் துறையின் ஊழலுக்கு முடிவு கட்ட கோரியும் இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை மாநில அரசு சாா்பில் மருத்துவா்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த இளநிலை மருத்துவா்கள் இந்தப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர் அனிகேட் மஹாடோ என்பவரின் உடல்நிலை நேற்றிரவு (அக். 10) திடீரென நலிவடைந்ததையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.