யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்…! வேட்புமனு தாக்கல்
யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வரை 10 அரசியல் கட்சிகளும், 9 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பில் போட்டியிடுவதற்காகவே 19 வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக 34 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்.
சிதறிய கட்சிகள்
யாழ். மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (10.10.2024) இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பு மனுக்களை கையளித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ். மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேட்புமனுவை நேற்று (9.10.2024) காலை 11.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (10) காலை தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராக க.இளங்குமரன் போட்டியிடுகின்றார்.
அதிகளவு வேட்புமனுக்கள்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா பொதுஜன பெரமுன யாழ்.மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று(10) தாக்கல் செய்தது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ், கீத்நாத் காசிலிங்கம் உள்ளிட்டோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் (Jaffna Electoral District) போட்டியிடுவதற்காக சாவகச்சேரி (Chavakachcheri) ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுபணம் செலுத்தியுள்ளார்.
மேலும், வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று வெள்ளிக்கிழமை இறுதித் தினம் என்பதனால் இன்று ஒரே நாளில் அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.