துபாயில் சூதாட்ட செயலியை உருவாக்கி 5000 கோடி வரை மோசடி! இந்தியர் ஒருவர் கைது
துபாயில்(Dubai) சூதாட்ட செயலியை உருவாக்கி சுமார் 5000 கோடி வரை பண மோசடி செய்த இந்தியர் ஒருவரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பரான ரவி உப்பல் ஆகியோரே இந்த மோசடி செய்துள்ள சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு துபாய் சென்று அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாகியுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதில் போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் வட மாநிலங்களில் இந்த சூதாட்ட செயலியில் பந்தயம் கட்டிய இலட்சக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
அதேநேரம், சூதாட்ட செயலியை பயன்படுத்தியவர்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மும்பை, கோல்கட்டா, போபால் உள்ளிட்ட 39 இடங்களில் சோதனை கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், சந்திரசேகர் துபாயில் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து நேற்று (11) சர்வதேச காவல் துறையினரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இன்னும் ஒரு வாரத்துக்குள் கைதான சந்தேக நபர் இந்தியாவிற்கு அழைத்து வரப்படலாம் என்று அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.