நாடொன்றில் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான 79 மில்லியன் சிறுமிகள்: அம்பலப்படுத்திய ஐ.நா
உலகமெங்கும் 8 சிறுமிகள் மற்றும் இளம் பெண்களில் ஒருவர் துஸ்பிரயோகம் மற்றும் வன்கொடுமைக்கு இலக்காகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறார்களுக்கான முகமை தெரிவித்துள்ளது.
18 வயதை எட்டும் முன்னர்
இதில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிரிக்காவில் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. UNICEF வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிரிக்காவில் மட்டும் 79 மில்லியன் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு அல்லது வன்கொடுமைக்கு இலக்காகியுள்ளனர்.
அதாவது ஐந்தில் ஒருவர் 18 வயதை எட்டும் முன்னர் வன்கொடுமைக்கு இலக்காகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படியான சிறுமிகள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பாடசாலைகளில் பின்னடைவை எதிர்கொள்வதாகவும் நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக நாடுகளில் மொத்தம் 370 மில்லியன் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் வன்கொடுமைக்கு இலக்காகியுள்ளனர். மேலும், இணையமூடாக அல்லது வார்த்தைகளால் இழிவு செய்வதையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணிக்கையானது 650 மில்லியன் தொடலாம் என கூறுகின்றனர்.
சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாலும், உலகம் மொத்தம் 240 முதல் 310 மில்லியன் சிறுவர்கள் மற்றும் ஆண்களும் தங்கள் குழந்தை பருவத்தில் துஸ்பிரயோகத்தை எதிர்கொண்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் என்பது நமது தார்மீக மனசாட்சியின் மீது படிந்துள்ள கறை என்றே UNICEF நிர்வாக இயக்குநர் Catherine Russell தெரிவித்துள்ளார்.
தரவுகளை வெளியிட மறுத்து
Sub-Saharan ஆப்பிரிக்காவில் 79 மில்லியன் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 75 மில்லியன், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் 73 மில்லியன்,
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 68 மில்லியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 45 மில்லியன், வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் 29 மில்லியன், ஓசியானியாவில் 6 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளியான தரவுகளில் குறையிருக்க வாய்ப்புள்ளதாகவும், சில நாடுகள் தரவுகளை வெளியிட மறுத்துள்ளதாகவும் UNICEF அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.