பெற்றோரின் சடலங்களுடன் பல ஆண்டுகள் வசித்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பகீர் பின்னணி
பிரித்தானியாவில் பெற்றோரை கொலை செய்து, அவர்களின் சடலங்களுடன் வாழ்ந்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிப்பு.
பொது மருத்துவருக்கு சந்தேகம்
பிரித்தானியாவின் Chelmsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்தே 36 வயதான Virginia McCullough என்பவர் தமது தந்தை 70 வயதான ஜான் என்பவருக்கு விஷம் தந்து கொலை செய்துள்ளார். அத்துடன் 71 வயதான தாயாரின் மார்பில் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 2019 ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரின் சடலங்களும் 2023ல் தான் கண்டெடுக்கப்பட்டது.
ஜான் மற்றும் லோயிஸ் தம்பதி தொடர்பில் பொது மருத்துவருக்கு சந்தேகம் எழவே, இந்த பகீர் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுவரையில், சொந்த பெற்றோரின் சடலங்களுடன் McCullough அதே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினரிடம் பல பொய்களையும் சொல்லி வந்துள்ளார். பெற்றோர் இருவரும் நீண்ட தூர பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும், உடல்நிலை மோசமடைந்துள்ளதால் ஓய்வெடுக்கின்றனர் என்றும், வேறு பகுதிக்கு அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர் என்றும் அடுக்கடுக்கான பொய்களை கூறி வந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதை அடுத்து, குறைந்தபட்சம் 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்
ஜான் – லோயிஸ் தம்பதி தொடர்பில் பல ஆண்டுகளாக தகவல் ஏதும் இல்லை என பொது மருத்துவர் புகார் தெரிவித்துள்ள நிலையில், பொலிசார் McCullough வீட்டுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர் நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி, McCullough வீட்டுக்குள் பொலிசார் வலுக்கட்டாயமாக நுழைந்தே அவரை கைது செய்துள்ளனர்.
தாம் ஒத்துழைக்க தயார் என்றும், கட்டாயப்படுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ள McCullough, பின்னர் நடந்தவற்றை பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர், சடலங்களை மறைவு செய்துள்ள பகுதிகளை பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளார். மட்டுமின்றி. பெற்றோரை கொலை செய்த பின்னர் அவர்களுக்கான உதவித்தொகையில் சுமார் 135,000 பவுண்டுகள் தொகையை செலவிட்டுள்ளார். இதில் 21,193 பவுண்டுகள் சூதாட்டத்தில் தொலைத்துள்ளார்.