ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 1000 கிலோ குண்டு: வீடு வீடாகச் சென்று எச்சரித்த பொலிசார்
ஜேர்மன் நகரமொன்றில் 1000 கிலோகிராம் எடையுள்ள குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1000 கிலோ எடையுள்ள குண்டு
ஜேர்மனியின் கொலோன் நகரத்தில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, கட்டுமானப்பணியின்போது 1000 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்யும் முயற்சி தோல்வி அடையவே, அதை பாதுகாப்பாக வெடிக்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
வீடு வீடாகச் சென்று எச்சரித்த பொலிசார்
நகரத்தில் வாழும் 6,400 பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், பொலிசார் வீடு வீடாகச் சென்று மக்கள் வெளியேறியதை உறுதி செய்தார்கள்.
அருகிலுள்ள மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகளும் வெளியேற்றப்பட்டபின், வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் குவியல் குவியலாக மண் கொண்டு கொட்டப்பட்டது.
பின்னர் அந்த வெடிகுண்டு பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டது. வெடிகுண்டு வெடித்தபின், அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
விடயம் என்னவென்றால், இரண்டாம் உலகப்போரின்போது கொலோன் நகரம் மீது ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகளை வீசியது பிரித்தானிய விமானப்படை.
அப்போது வீசப்பட்ட குண்டுகளில் வெடிக்காத குண்டுகள்தான், அவ்வப்போது கட்டுமானப்பணியின்போது கொலோன் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.