விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கவலையில் பிரித்தானிய கல்வி நிறுவனங்கள்
பிரித்தானியாவில் முன்பு ஆண்ட ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு, சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆகவே, பிரித்தானியாவில் கல்வி கற்பதிலுள்ள ஆர்வம் சர்வதேச மாணவர்களுக்கு குறைந்துள்ளாற்போல் தோன்றுகிறது.
விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது
ஆம், பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டில், ஜூலை மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடையில், கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 16 சதவிகிதம் குறைந்துள்ளதாக உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல், விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் எண்ணிக்கையோ, 89 சதவிகிதம் குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 59,900 பேர் மாணவர்களின் குடும்ப விசாவுக்கு விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 6,700 பேர் மட்டுமே விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
கவலையில் பிரித்தானிய கல்வி நிறுவனங்கள்
விடயம் என்னவென்றால், கனடா போன்ற சில நாடுகளைபோலவே, பிரித்தானியாவிலும், உள்ளூர் மாணவர்களைவிட சர்வதேச மாணவர்கள் பல மடங்கு அதிக கல்விக் கட்டணம் செலுத்துகிறார்கள்.
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை நம்பித்தான் இயங்குகின்றன.
சொல்லப்போனால், வெளிநாட்டு மாணவர்கள் எக்கச்சக்கமாக கல்விக்கட்டணம் செலுத்துவதால்தன, உள்ளூர் மாணவர்களால் குறைந்த கல்விக் கட்டணத்துக்கு கல்வி கற்க முடிகிறது என்றே கூறலாம்.
இந்நிலையில், கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, பல்கலைகளின் நிதி நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என 140 பிரித்தானிய பல்கலைகளின் பிரதிநிதியான Universities UK என்னும் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆகவே, சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என பல்கலைக்கழக யூனியன்கள் கோரியுள்ளன.