சார்லஸ் மன்னராக இருப்பது மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால்… பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிவிப்பு
எலிசபெத் மகாராணியார் உயிருடன் இருக்கும்போதே சில நாடுகள், தங்களுக்கு பிரித்தானியாவின் தலைமை தேவையில்லை என குரல் கொடுக்கத் துவங்கியது நினைவிருக்கலாம். அவற்றில் அவுஸ்திரேலியாவும் ஒன்று!
அத்துடன், சார்லஸ் மன்னரானதும், எங்களுக்கு மன்னர் வேண்டாம் என பிரித்தானியாவின் சில பகுதிகளிலிருந்தே எதிர்ப்பு உருவானதும் குறிப்பிடத்தக்கது.
பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
தற்போது மன்னர் சார்லசும் ராணி கமீலாவும், அவுஸ்திரேலியா மற்றும் சமோவா தீவுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக செல்ல இருக்கிறார்கள்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு மன்னர் வேண்டாம் என குரல் கொடுத்துவரும் அமைப்பான Australian Republic Movement (ARM) என்னும் அமைப்பு, மன்னரை சந்திக்க தங்களுக்கு நேரம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கு பதிலளித்துள்ள பக்கிங்காம் அரண்மனை, சார்லஸ் மன்னராக இருப்பது மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் விலகத் தயார் என்னும் ரீதியில் பதிலொன்றைத் தெரிவித்துள்ளது.
மன்னரின் தனிச்செயலர்களில் ஒருவரான Dr Nathan Ross, ARM அமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், மன்னர் சார்லஸ், தனிப்பட்ட முடிவுகளை எடுக்காமல், நாடாளுமன்றத்தின் ஆலோசனையின் பேரில் முடிவுகள் எடுக்கும் அரசியல் சாசனத்துக்குக் கட்டுப்பட்ட ஒரு மன்னர் ஆவார்.
ஆகவே, அவுஸ்திரேலியாவுக்கு மன்னர் வேண்டாம் என மக்கள் விரும்பினால், அதாவது, அவுஸ்திரேலியா குடியரசாக ஆக விரும்பினால், அதை அவுஸ்திரேலிய மக்கள்தான் முடிவு செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, வாக்கெடுப்பு நடத்தி, தங்களுக்கு மன்னர் வேண்டுமா அல்லது குடியரசாக விரும்புகிறார்களா என்பதை மக்கள் முடிவு செய்யலாம் என்றும், அதற்கு எவ்வகையிலும் மன்னர் சார்லஸ் தடையாக குறுக்கே நிற்கமாட்டார் என்றும் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.