எரிபொருள் விலையை 82 ரூபாவால் குறைக்கலாம் – ஆனந்த பாலித
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் தனது பிரச்சார மேடைகளில் வழங்கிய உறுதிகளின் படி, விலை திருத்தம் செய்யப்படவில்லை என்பது தொடர்பில் பல கருத்துக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
அந்தவகையில், புதிய அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்கத் தவறியதாக ஐக்கிய கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் லாபமீட்டும் நிலையில் எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா வரி அறவீடு செய்வதாக ஆனந்த பாலித குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிபொருள் லீட்டரின் விலை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பதவியை ஏற்றுக்கொள்ள முன்னதாக இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் என ஆனந்த பாலித தெரிவிததுள்ளார்.
பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் தற்பொழுது 11 பில்லியன் ரூபா லாபமீட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
50 ரூபா வரி நீக்கத்துடன் எரிபொருள் ஒரு லீட்டரின் விலையை 82 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழை மக்கள் மறைமுக நன்மை
இந்நிலையில், எரிபொருள் விலையைக் குறைத்தால் அதன் இலாபம் பணக்காரர்களுக்கு மாத்திரமே கிடைக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், எரிபொருள் விலையை குறைப்பதன் மூலம் ஏழை மக்களுக்கு நேரடி நிவாரணம் கிடைக்காது எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
வரிகள் நீக்கப்பட்டு எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் அதன் பலன் பணக்காரர்களுக்குத் தான் கிடைக்கும்.
அதிக எரிபொருளை பயன்படுத்துவது ஏழை மக்கள் அல்ல. ஏழை மக்கள் சில மறைமுக நன்மைகளைப் பெறலாம். ஆனால், பணக்காரர்களுக்கு அதிக நன்மை உண்டு என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.