லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் பிரதான வாயிலை தகர்த்தன இஸ்ரேல் டாங்கிகள் : அதிகரிக்கும் பதற்றம்
தெற்கு லெபனானில்(lebanon) உள்ள அமைதி காக்கும் படைகளை “உடனடியாக” வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் (Antonio Guterres)கோரிக்கை விடுத்த சில மணிநேரங்களில் அங்குள்ள ஐநா அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் மீது இஸ்ரேல்(israel) படை தாக்குதல் நடத்தியுள்ளது.
UNIFIL படைகளை தீங்கிழைக்கும் வழியிலிருந்து விடுவியுங்கள். அது இப்போதே உடனடியாக செய்யப்பட வேண்டும்” என்று நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பிரதான வாயில் தகர்த்தழிப்பு
இதேவேளை லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஐ நா இடைக்காலப் படையின் (UNIFIL) பிரதான வாயிலை இரண்டு இஸ்ரேலிய டாங்கிகள் இன்று(13) காலை “அழித்துவிட்டன” என்று ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய துருப்புக்கள் பின்னர் “பலவந்தமாக ஐநா வளாகத்திற்குள் நுழைந்தன” என்று மேலும் தெரிவித்தன.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா. படைகளை எல்லைப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வலுக்கட்டாயமாக உள்நுழைந்தன
இன்று அதிகாலை ஐநா அலுவலகத்தின் பிரதான வாயிலை தகர்த்து உள்நுழைந்த இஸ்ரேலிய டாங்கிகள் வலுக்கட்டாயமாக உள்நுழைந்தன. எனினும் ஐநா அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் அந்த டாங்கிகள் அங்கிருந்து வெளியேறின.
இதேவேளை அலுவலகத்திற்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஐ.நா “முகாமிற்குள் புகை நுழைந்த நிலையில், பதினைந்து அமைதி காக்கும் படையினர் தோல் எரிச்சல் மற்றும் இரைப்பை குடல் எதிர்வினைகள் உட்பட விளைவுகளை சந்தித்தனர்.”
“பாதிக்கப்பட்ட அமைதி காக்கும் படையினர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று ஐநா வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.