அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலைத் தாக்கிய சக்திவாய்ந்த புயல்! 7 பேர் பலி..30 ஆண்டுகளில் மோசமான வானிலை நிகழ்வு
பிரேசிலில் சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
சக்திவாய்ந்த புயல்
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை மில்டன் சூறாவளி தாக்கியதில் 3 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்புகள், வணிக வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தன. St Lucieயில் 5 பேர் உயிரிழந்ததாக ஆளுநர் தெரிவித்தார்.
இந்நிலையில் தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது.
107.5 கிலோ மீற்றர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இது 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச சக்திவாய்ந்த புயல் ஆகும்.
புயல் தாக்குதலால் Bauru பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல் Diadema, Cotia மற்றும் சாவ் பாலோ நகரங்களில் மரங்கள் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர் என ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இருளில் மூழ்கிய 10 லட்சம் வீடுகள்
கனமழையுடன் மணிக்கு 108 கிலோ மீற்றர் வேகத்தில் புயல் காற்று வீசியதில் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.
மேலும் புயலால் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.
இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சாவ் பாலோ மற்றும் அதன் அருகில் உள்ள நகரங்களான Sao Bernardo do Campo, Cotia, Sao Caetano, Santo Andre மற்றும் Diademaயில் நீர் விநியோகம் சீர்குழைந்தது.
இந்த புயல் தாக்குதலானது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் மிக மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.