மைனா பட பாணியில் நடந்த சம்பவம்… சிறையில் ராம்லீலா நாடகம்.. ஆயுள் தண்டனை கைதி எஸ்கேப்!
உத்தராகண்ட் சிறையில் நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் வானர சேனையாக வேடமிட்ட ஆயுள் தண்டனை கைதி உட்பட இருவர் சீதையை தேடிச் செல்வதாக கூறி எஸ்கேப் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைனா திரைப்படத்தில் சிறையில் தீபாவளி கொண்டாடும்போது, கைதியாக இருக்கும் கதாநாயகன் தப்பிச் செல்லும் காட்சி போன்ற ஒரு சம்பவம் நிஜத்திலும் நிகழ்ந்துள்ளது. ராம்லீலா நாடகத்தில் அனுமனின் வானர சேனையின் வானரங்களாக வேடமிட்ட இரு கைதிகள், போலீசாருக்கே அல்வா கொடுத்து விட்டு தப்பியுள்ளனர்.
நவராத்திரி விழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறையிலும் வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது,போலீஸ் அதிகாரிகளின் ஏற்பாட்டில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் அரங்கேறியுள்ளது.
அனுமனின் வானர சேனையின் வானரங்களாக கைதிகள் சிலர் வேடமிட்டு சீதையை தேடிச் செல்வது போன்று தத்ரூபமாக நடித்துள்ளனர். ராம்லீலா நாடகம் இனிதே நடந்து முடிந்த நிலையில், மறுநாள் சனிக்கிழமை வழக்கம் போல் கைதிகளின் தலைகளை போலீசார் எண்ணியுள்ளனர். அப்போது, இருவர் மட்டும் காணாமல் போனதைக் கண்டு சிறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து சிறை முழுவதும் தேடிப் பார்த்தபோது அவர்கள் இருவர் காணவில்லை என்பதை உறுதி செய்தனர். இதுதொடர்பான விசாரணையின்போது, நவராத்திரி விழாவுக்கு முன்பு மூன்று கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டியது தெரியவந்தது.
ராம்லீலா நாடகத்தின் போது தப்பிச் செல்ல பக்காவாக ஸ்கெட்ச் போட்டு காத்திருந்தனர். அதன்படி, நாடகம் அரங்கேறிய போது வானரங்களாக வேடமிட்ட மூன்று கைதிகள், சீதையை தேடிச் செல்வதாக கூறி தப்பிச் செல்ல ஆயத்தமாகியுள்ளனர். இதற்காக, சிறையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்த ஏணி மூலம் இருவர் மட்டும் சுவர் ஏறி குதித்து ஓடியுள்ளனர்.
மற்றொரு நபரால் ஏற முடியாததால் அவரின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தப்பியோடிய இரு கைதிகளில் பங்கஜ் என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். மற்றொரு கைதியான ராஜ்குமார், ஆள் கடத்தில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த இரு கைதிகளும் சிறை அதிகாரிகள் அசந்த நேரத்தில் தப்பியோடியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாக கூறி சிறை காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வானரங்களாக வேடமிட்ட இரு கைதிகள், சீதையை தேடிச் செல்வதாக கூறி, தப்பியோடிய சம்பவம் உத்தராகண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.