;
Athirady Tamil News

முட்டை விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

0

முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவைத் தாண்டிய போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அமைச்சின் (Ministry of Agriculture of Sri Lanka) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, முட்டையின் விலை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழி தீவனத்தின் விலை
கோழி தீவனத்தின் விலை உயர்வால் முட்டை விலை உயர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பல பண்ணைகளில் போதிய முட்டைகள் இல்லாததால், பண்ணை உரிமையாளர்கள் முட்டை விலையை உயர்த்தியதாகவும் முட்டை வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், பல இடங்களில் அதே விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் அண்மையில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தனர்.

முட்டையின் விலை
இதனடிப்படையில், 20 முதல் 30 ரூபா வரை குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

சில பகுதிகளில் முட்டையின் விலை கிட்டத்தட்ட 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் இரண்டு வாரங்களுக்கு முன் சந்தையில் முட்டை விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் ஒரு முட்டை 28 ரூபா தொடக்கம் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அண்மையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி மற்றும் சந்தையில் முட்டைக்கான கேள்வி குறைந்தமையினால் முட்டை விலை குறைவடைந்தததாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர (Ajith Gunasekara) சுட்டிக்காட்டியிருந்தார்.

முட்டை உற்பத்தி
இந்தநிலையில், முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்ததாக இலங்கை முட்டை வர்த்தக சங்கமும் தெரிவித்ததுடன் பெரும்பாலான மொத்த வியாபாரிகள் முட்டைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்ததனால் வாடிக்கையாளர்களுக்கு பாரிய நிவாரணம் கிடைத்தததாக அஜித் குணசேகர குறிப்பிட்டிருந்தார்.

மேலதிக உற்பத்தி பொருட்கள் சந்தையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் தற்போது உற்பத்தியாகும் தினசரி முட்டைகள்தான் சந்தைக்கு வருகின்றமையால் இவ்வாறு விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு, முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து மக்களும் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

மேலும், சில வியாபாரிகள் இருக்கும் விலையில் 10 ரூபாய் மற்றும் 15 ரூபாய் அதிகம் வைத்து விற்பதால் மக்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.