கோர விபத்தில் மூன்றரை வயது ஆண் குழந்தை பலி
கம்பளையிலிருந்து (Gampola), நாவலப்பிட்டி (Nawalapitiya) நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (13.10.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முன்னால் சென்ற முச்சக்கரவண்டி மீது ஜீப் வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து அதில் இருந்து சாரதியும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
பின்னர் ஜீப் வண்டியும் முன்னால் ஓடி வீதிக்கு அருகில் இருந்த வண்டியுடனும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிறுவன் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததுள்ளது.
சம்பவத்தில் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு வாகன விபத்து
இதேவேளை, மட்டக்களப்பு (Batticaloa) – கல்முனை (Kalmunai) பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy) ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து, கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து சென்று வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளது.
காவல்துறை விசாரணை
நேற்று (13) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் துவிச்சக்கர வண்டி செலுத்துனரும் படுகாயமடைந்து, களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்களின் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.
சாரதி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இ்ந்த விதாந்தாமலை, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் , விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.