தைவானை சுற்றிவளைத்து சீனா போர்பயிற்சி: தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம்
தைவானை(taiwan) தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா (china)உரிமை கோரும் நிலையில், தைவானின் எல்லைகளை சுற்றி வளைத்து, சீன ராணுவம் போர்ப் பயிற்சியை மேற்கொண்டிருப்பதால் தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சீன ராணுவத்தின் முப்படையினரும் 2 நாட்களாக மேற்கொள்ளும் போர்ப்பயிற்சி,பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும், இறையாண்மையைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட சட்டபூர்வ நடவடிக்கை என்று சீன ராணுவம் அறிவித்துள்ளது.
சீனாவின் ராணுவப் பயிற்சி அதன் ஆயத்தநிலையை பரிசோதிக்கும் வகையில் நடைபெறுகிறது என சீனாவின் கிழக்கு வட்டார இராணுவப் பேச்சாளர் கப்டன் லி ஸி தெரிவித்தார்.
போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் பயிற்சியில்
தைவானின் வடக்கு, தெற்கு, கிழக்கு வட்டாரங்களில் பயற்சி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று சீனாவின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது.
சரியான பதிலடி கொடுக்கப்படும்
இதற்கிடையே, தைவானின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மிரட்டும் போர்ப்பயிற்சியை உடனே நிறுத்துமாறு தைவான் அதிபர் லாய் ச்சிங் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் நடவடிக்கைகளை தைவான் படைகள் தடுத்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அத்துடன் தைவானை தனது நாட்டுடன் இணைக்க இராணுவ பலத்தைக்கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று திங்கட்கிழமை சீனா மீண்டும் வலியுறுத்திக் கூறியது.
சீனாவின் நடவடிக்கை பதற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.