தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்றிட்டம் உருவாக்கலுக்கான செயலமர்வு
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய நல்லிணக்கக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் செயற்றிட்டம் உருவாக்கலுக்கான ஆலோசனைச் செயலமர்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (14.10.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இன,மத, மொழி , சமூக,பொருளாதார , அரசியல் சமத்துவத்தை பேணுவதற்காக இவ் அலுவலகம் செயற்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றம் ஊடாக சட்டம் அமுல்படுத்தப்பட்டது எனவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எல்லோரும் எவ்வித வேறுபாடுகளின்றி சமமானவர்கள் என்ற நோக்கத்தை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார். மேலும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது தேசிய ஒற்றுமையினை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் வடக்கு மாகாணத்தின் 05 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 05 பிரதிநிதிகள் வீதம் பங்குபற்றினார்கள்.
இச் செயலமர்வில் மதகுருமார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பிரதிப்பணிப்பாளா், உதவிப்பணிப்பாளர்கள், வடமாகாண தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் வடக்கு மாகாண மாவட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.