பட்டமளிப்பு விழா மேடையில்.. ஆளுநரிடம் மாணவர் திடீரென செய்த செயல் – பரபரப்பு சம்பவம்!
பட்டமளிப்பு நிகழ்வில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேடையில்..
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 39வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பளித்தனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்தவர்கள் அனைவரும் ஆளுநரிடம் தங்களது பட்டங்களை பெற்றனர். அப்போது, ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்ற மாணவர் மேடையில் பட்டம் பெறும்போது ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை கொடுக்க முயன்றார்.
மாணவர்
உடனடியாக அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றதால் சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இருப்பினும் மாணவர் பிரகாஷ் ஆளுநரிடம் அந்த மனுவை கொடுத்தார். அந்த மனுவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு விதமான நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது.
கைடுகள் என நியமிக்கப்படுபவர்கள் முனைவர் படிப்பிற்கான வைவா போன்ற நேரங்களில் தனிப்பட்ட குடும்ப வேலைகளை செய்யச் சொல்லிப் கட்டளை போடுகின்றனர். ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.
எங்களைப் போன்ற எளிமையான மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதியில் முறையான வசதிகள் இல்லை. கல்லூரியிலும் பல முறைகேடுகள் நடக்கிறது என மனுவில் தெரிவித்துள்ளார்.