புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள பெற்றோர்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் உத்தரவை வழங்கக் கோரி, இன்று இலங்கையின் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பல மாணவர்களின் பெற்றோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தேர்வில் இருந்து ஒரு வினாத்தாள் ஒன்றின் மூன்று கேள்விகள் கசிந்ததாக, 2024 செப்டம்பர் 20 ஆம் திகதியன்று, கூறப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பரீட்சை
இதனையடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் குறியிடல் நடவடிக்கைகள் விசாரணைக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பரீட்சை வினாத்தாளில் இருந்து மூன்று கேள்விகள் மட்டுமே முன்கூட்டியே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அநுரகுமார திஸாநாயக்கவிடம் முறைபாடு
எனினும் முழு வினாத்தாளும் கசிந்ததாக பல சந்தர்ப்பங்களில் மாணவர்களின் பெற்றோர் கூறி வருகின்றமையை அடுத்து, இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முறையிட்டதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு விசாரணை முடியும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார்.
அத்துன், கசிந்ததாகக் கூறப்படும் 03 வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
எனவே, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விடைத்தாள்களை மதிப்பிடும் பணி உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான விடயங்களின் நடந்துமுடிந்துள்ள நிலையிலேயே தற்போது உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.