அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த எச்சரிகை கடிதம்
காசா தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் முப்பது நாட்களுக்குள் காசாவின் மனிதாபிமான நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான வழிவகைகளை இஸ்ரேல் ஏற்படுத்த வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்க சட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இராணுவ உதவி
இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட தவறினால் அமெரிக்கா இராணுவம் வழங்கி வரும் உதவிகளில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த கடிதமானது அமெரிக்க ராஜாங்க செயலாளர் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கூட்டாக இணைந்து இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகார அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், காசாவின் நிலைமைகள் குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காசாவில் பதிவான உயிர் பலி
கடந்த வருடம்(2023) அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல் மற்றும் ஹமாஸின் தாக்குதல்களினால் காசாவில் 42,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் பலி பொதுமக்கள் மற்றும் போராளிகளை வேறுபடுத்தவில்லை.
போரைத் தொடங்கிய ஹமாஸின் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் பெரும்பாலும் பொதுமக்கள் மற்றும் போராளிகள் மேலும் 250 பேர் கடத்தப்பட்டனர்.
இதேவேளை, பிரவுன் பல்கலைக்கழகத்தின் போர்ச் செலவுத் திட்டத்திற்கான அறிக்கையின்படி , காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, மத்திய கிழக்கைச் சுற்றி மோதலை அதிகரிக்க வழிவகுத்ததில் இருந்து, அமெரிக்கா குறைந்தபட்சம் 17.9 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கான இராணுவ உதவிக்காக செலவிட்டுள்ளது.
காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான அதன் நடவடிக்கைகளில் பயன்படுத்திய பல பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை இஸ்ரேல் வாங்குவதற்கு அமெரிக்கா உதவியுள்ளது.