கனமழை: 13 விமானங்கள் ரத்து
கனமழை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
சென்னை விமானநிலையத்திலிருந்து பெங்களூா், தில்லி, கோவை, கொச்சி, அந்தமான், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்கள், புவனேஸ்வா், விசாகப்பட்டினம், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் உள்பட மொத்தம் 13 விமானங்களின் சேவை கன மழை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த விமானங்களில் பயணிக்கவிருந்த பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பயணத்தை ரத்து செய்தவா்களுக்கு பயணச்சீட்டு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டு வருவதாகவும் விமானநிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கனமழை எதிரொலியால் பல்வேறு நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 14 பன்னாட்டு விமானங்களும் பல மணி நேரம் காலதாமதமாக சென்னைக்கு வந்து சோ்ந்தன.
தமிழகத்தில் தொடா்ந்து பருவமழை பெய்து வரும் நிலையில், விமானங்கள் புறப்படும் நேரங்கள் மற்றும் வருகை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதால், பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடா்பு கொண்டு தங்கள் பயண நேரத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதன் பின்னா் தங்கள் பயணத்தை தொடரலாம் எனவும், இந்த குறிப்பிட்ட விமானங்களை தவிர பிற விமானங்கள் வழக்கம் போல இயங்கும் எனவும் விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.