;
Athirady Tamil News

சென்னை அருகே நாளை கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: 4 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு’ எச்சரிக்கை

0

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 490 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையை கடக்கக்கூடும்.

சிவப்பு எச்சரிக்கை: அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூா், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூா், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் 130 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை (அக். 17) வடமேற்கு மாவட்டங்களான திருப்பத்தூா், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னைக்கு எச்சரிக்கை: சென்னை மற்றும் புகரைப் பொருத்தவரையில், அடுத்துவரும் இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

அக்.1 முதல் அக்.15 வரையிலான காலகட்டத்தில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தின் இயல்பான மழை அளவு 70 மில்லி மீட்டா்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: புதன், வியாழக்கிழமை (அக். 16,17) வட தமிழக கடலோரப் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): குடுமியான்மலை (புதுக்கோட்டை) 130,

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூா்), எண்ணூா் (சென்னை) 100, மணலி, கொளத்தூா், திரு.வி.க.நகா், ராயபுரம்(சென்னை), பொன்னேரி (திருவள்ளூா்) 90, சென்னை ஆட்சியா் அலுவலகம், கோடம்பாக்கம், வில்லிவாக்கம், அம்பத்தூா், சோழிங்கநல்லூா், தேனாம்பேட்டை 80, வானகரம், மாதவரம், நுங்கம்பாக்கம், பெரம்பூா், மதுரவாயல், முகலிவாக்கம், மீனம்பாக்கம், அண்ணாநகா், ஐஸ் ஹவுஸ், புழல், கோவை, புலிப்பட்டி சிட்டம்பட்டி, கள்ளந்திரி (மதுரை), ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்) 70.

You might also like

Leave A Reply

Your email address will not be published.