சாம்சங் தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் – போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?
ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்த சாம்சங் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
சாம்சங் தொழிற்சாலை
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
போராட்டம் வாபஸ்
தற்போது இவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்து அனைவரும் பணிக்கு திரும்பவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி இன்று(15.10.2024) 4 அமைச்சர்களின் தலைமையில் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
4 முடிவுகள்
1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு, வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர்” என கூறப்பட்டுள்ளது.