கிளிநொச்சி மாவட்ட மட்ட வெள்ள அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்
2024ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட மட்ட வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(16) புதன்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா, பருவமழை மற்றும் இதனால் மாவட்டத்தில் எதிர்வுகூறக் கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
மேலும், வடகீழ் பருவப் பெயர்ச்சி பருவ மழையின்போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள், அதிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டினை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பிரதேசங்கள் மற்றும் வீதிகள் இனங்காணப்பட்டு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மக்களுக்கான முன் எச்சரிக்கை, கிராம ரீதியான முன்னாயத்தம், பாதுகாப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்தல், முப்படையினரின் பங்களிப்பு, நிவாரண ஏற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதனைவிட நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனர்த்த தடுப்பு முன்னாயத்த செயல்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இரணைமடுக்குளம் வான் பாயும் போது ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய மற்றும் நீர்ப்பாசன திணைக்களங்களின் அதிகாரிகள், முப்படையினர், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், துறைசார் திணைக்களங்களங்களின் உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் செயலாளர், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.