;
Athirady Tamil News

ஜேவிபி யினரும் மதுபான சாலைகளை பெற்றுள்ளார்களா ?

0

மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடாது இருப்பதால், ஜே.வி.பி யினரும் மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை பெற்றுள்ளனரா என நாங்கள் சந்தேகிக்கிறோம் என சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பெரமுன கட்சியில் இருந்த பலர் தற்போது கட்சியில் இல்லை. அவர்கள் கட்சியை விட்டு போய்விட்டார்கள். கட்சியில் இருந்த இனவாதிகள், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என எல்லோரும் கட்சியை விட்டு போய்விட்டார்கள். தற்போது பெரமுன தூய கட்சியாக காணப்படுகிறது.

கட்சியில் பல பிரச்சனைகள் இருந்தன. நாம் அவற்றில் இருந்து புதிய பாதையில் பயணிப்போம், தற்போது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நாமல் ராஜபக்சே கட்சியின் தேசிய அமைப்பாளராக உள்ளார். நாங்கள் அவரின் தலைமையில் பயணிப்போம்.

எமது கட்சி யாழில் பல பின்னடைவுகள் சந்தித்து இருந்தன. இனிவரும் காலங்களில் மக்களோடு மக்களாக இருந்து வேலை செய்வோம். இப்ப உள்ள அரசாங்கம் பல பொய்களை சொல்லி. ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அதன் உண்மைகளை மக்களுக்கு தெளிவூட்டுவோம்.

தென்னிலங்கையை பொறுத்த வரைக்கும் அரசியலில் 15 தொடக்கம் 30 வருட காலங்கள் இருந்தவர்கள், அரசியலில் ஓய்வு பெற்று விலகி இருக்கிறார்கள். அவர்கள் இளையோருக்கு வழி விட்டுள்ளனர். ஆனால் வடக்கில் யாரும் இளையோருக்கு வழி விட்டுக்கொடுக்க தயார் இல்லை. தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் வடக்கிலும் வர வேண்டும்.

கடந்த காலங்களில் என்னை நேரடி அரசியலுக்கு வருமாறு பல்வேறு அழைப்புக்கள் வந்தன. நாமல் தேசிய அமைப்பாளரான பின்னரே நானும் நேரடி அரசியலுக்குள் வந்துள்ளேன்.

13ஆம் திருத்தம் தொடர்பாக நாமல் வெளியிட்ட கருத்து கட்சியின் கருத்து. அதாவது காணி பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என்பது. ஆனால் நான் உள்ளிட்ட பலர் அதனை ஏற்கவில்லை. அதனை அவர்களுக்கு நாங்கள் புரிய வைப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

ஜேவிபி யினர் முன்னர் 13 க்கு எதிராக போராடியவர்கள். பின்னர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 13 ஐ முழுமையாக தருவோம் என்றார்கள். இன்று 13ஐ தரவே மாட்டோம் என சொல்கின்றனர்.

அன்று 13ஐ தர முடியாது என கூறிய நாமலை இனவாதிகள் என கூறியவர்கள் இன்று ஜனாதிபதி அநுராவிற்கு என்ன கூற போகிறார்கள்.

அதேபோன்று தேர்தல் காலத்தில் , முன்னைய அரசாங்கத்திடம் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் தம் வசம் உண்டு எனவும் அதனை வெளியிடுவோம் என கூறியவர்கள் ஏன் இன்னமும் அதனை வெளியிடவில்லை ?

அவர்கள் பெயர் பட்டியலை வெளியிடாது இருப்பதனை பார்க்கும் போது, மதுபான சாலைக்கான அனுமதிகளை ஜேவிபியினரும் பெற்று இருக்கலாம். என நாம் சந்தேகிக்கிறோம். அல்லது பெரிய டீலை முடித்துள்ளதால் தான் பட்டியலை வெளியிடாது உள்ளனரா எனும் சந்தேகமும் உண்டு. தேர்தலுக்கு முன்னர் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்ற்வர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு , அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதேவேளை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் தாம் யாரும் மதுபான சாலைக்கான அனுமதியை பெறவில்லை என சத்திய கடதாசி முடித்து தர சொல்லுகிறோம். நான் யாருக்கும் மதுபான சாலைகளை பெற்றுக்கொடுக்கவோ , எனது பெயரில் பெறவோ இல்லை என சத்திய கடதாசி முடித்துள்ளேன். அதனை போல ஏனையவர்களும் சத்திய கடதாசி முடித்து தரட்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை பெரியளவிலான பிரச்சனை என்பதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். எமது கட்சியின் ஆட்சி காலத்தில் அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தோம். முடியவில்லை. தற்போதுள்ள அரசாங்கம் அந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கு எமது கட்சியும் நிச்சயம் ஆதரவு வழங்குவோம்.

கடந்த காலங்களில் வடக்கில் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் போதாது என்பதனை ஏற்றுக்கொள்கிறேன். அதனால் தான் நான் இம்முறை வடக்கிற்கு வந்துள்ளேன். மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்போம்.

நாமல் ராஜபக்சேயும் இனிவரும் காலங்களில் வடக்கிற்கு நேரடியாக விஜயம் செய்து இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிகளை முன்னெடுப்பார். மாதத்தில் ஒன்று , இரண்டு தடவைகள் வருகை தந்து இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதனை தீர்க்க முயற்சிகளை முன்னெடுப்பார் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.