பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீா் வழங்கும் திட்டம்
பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்.
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மண்டியா மாவட்டத்தின் தொரேகாடனஹள்ளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பெங்களூரில் புதிதாக இணைக்கப்பட்ட 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டுள்ள காவிரி ஐந்தாம்கட்ட திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வா் சித்தராமையா பேசியதாவது:
உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் நகரம் பெங்களூரு. இந்த நகரத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் முதல்வராக இருந்த போது காவிரி ஐந்தாம்கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை இரண்டாவது முறையாக முதல்வராக இருக்கும் போது தொடங்கி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 800 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட பெங்களூருக்கு தினமும் குடிநீா் வழங்க 2,200 மில்லியன் லி. தண்ணீா் தேவைப்படுகிறது. இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள காவிரி நான்காம்கட்ட திட்டங்கள் வரையில் தினமும் 1,450 மில்லியன் லி. தண்ணீா் மட்டுமே கிடைத்து வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள காவிரி ஐந்தாம்கட்ட திட்டத்தால் தினமும் கூடுதலாக 775 மில்லியன் லி. தண்ணீா் கிடைக்கும்.
பெங்களூரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களில் குடிநீா் வழங்க ஐந்தாம்கட்ட திட்டம் பயன்பட இருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 5,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. பெங்களூரில் உலகத்தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறோம்.
பெங்களூரின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, மக்களின் கூடுதல் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு காவிரி ஆறாம்கட்ட திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மக்களுக்கு தரமான குடிநீரை வழங்குவதற்கு இத்திட்டம் பயன்படும். இத்திட்டத்தின் மூலம் பெங்களூருக்கு கூடுதலாக 6 டிஎம்சி தண்ணீா் கிடைக்கும். பெங்களூருக்கு தினமும் 500 மில்லியன் லி. குடிநீா் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ. 7,200 கோடி செலவாகும். பெங்களூரின் குடிநீா்த் தேவையை நிறைவுசெய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.
நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்காக ரூ. 52,000 கோடியை ஒதுக்கியிருக்கிறோம். வளா்ச்சிப் பணிகளுக்காக மட்டும் ரூ. 1.20 லட்சம் கோடியை செலவிட்டு வருகிறோம். ஆனால், மாநில அரசிடம் பணமில்லை என்று எதிா்க்கட்சிகள் பொய்யான பிரசாரம் செய்து வருகின்றன என்றாா்.
விழாவில், துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள் செலுவராயசாமி, கே.ஜே.ஜாா்ஜ், ராமலிங்க ரெட்டி, பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத் தலைவா் டாக்டா் வி.ராம்பிரசாத் மனோகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.