ரஷ்யாவில் கார் குண்டுவெடிப்பில் 6 வயது மகனுடன் உயிர்தப்பிய CEO! சிக்கிய அவரது பங்குதாரர்
ஷ்ய தொழிலதிபர் விக்டர் மிஷாசேவ் கார்குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய நிலையில், அவரது வணிக பங்குதாரர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
விக்டர் மிஷாசேவ்
தென்மேற்கு மாஸ்கோவில் ஷேக்கர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான விக்டர் மிஷாசேவ் கார்குண்டு வெடிப்பில் சிக்கினார்.
அவர் தனது 6 வயது மகனுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அதனைத் தொடர்ந்து மிஷாசேவ்வும் அவரது மகன் மற்றும் பாதிப்பிற்குள்ளான அண்டைவீட்டு நபர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
SUV காரின் டேங்கில் இருந்து சந்தேகத்திற்குரிய பொருளை அகற்றும்போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு
இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், வணிகம் அல்லது தனிப்பட்ட தகராறு காரணமாக மிஷாசேவ் இலக்காகி இருக்கலாம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்குழு புதன்கிழமை நள்ளிரவில் மிஷாசேவ்வின் வணிக பங்குதாரரான 50 வயது நபரை கைது செய்ததாக அறிவித்தது. ஆனால், சட்ட அமலாக்க அதிகாரிகள் அந்நபரின் பெயரை வெளியிடவில்லை.
ஆயுதங்களின் பதுக்கல்
எனினும், குறித்த நபரின் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட ஆயுதக் களஞ்சியம் என்று அவர்கள் கூறிய வீடியோக்களை புலனாய்வாளர்கள் வெளியிட்டனர்.
EADaily செய்தியின்படி, மாஸ்கோவின் தென்மேற்கில் ஒரு கார் குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை தேடியபோது ஆயுதங்களின் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.