;
Athirady Tamil News

சீன செல்வாக்கை முறியடிக்கும் அநுர அரசின் முதலாவது இந்திய உட்கட்டமைப்புத் திட்டம்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான முயற்சிகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டமாக இந்திய – இலங்கை பாதை திட்டமிடல் காணப்படுவதாக இந்திய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 பில்லியன் டொலர் செலவில் சாலை மற்றும் தொடருந்து இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக, இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ராமேஸ்வரம் – தலைமன்னார்

இந்தநிலையில் கடந்த மாதம் இது தொடர்பான சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றதாக சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இரு தரப்பு யோசனையின்படி, இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையில் திருகோணமலை இடையே நெடுஞ்சாலை மற்றும் தொடருந்து இணைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னாருக்கும் இடையில் தரைப்பாலத்தை இலங்கை அரசாங்கம் 2002 இல் முன்மொழிந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் தரைப்பாலம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் தற்போது இந்த யோசனை இறுதியாகியுள்ளது என்று பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்தியா
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வீதி அல்லது தொடருந்து தொடர்புகள் இல்லை. இலங்கைக்கு மிக அருகில் உள்ள இந்திய நகரமான தனுஸ்கோடியில் ஒரு தொடருந்து நிலையம் இருந்தது.

ஆனால் அது 1964 இல் ஒரு சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்டது. 1966 வரை ஒரு குறுகிய படகு சேவையின் மூலம் இலங்கையில் தலைமன்னார் மற்றும் இந்தியாவின் தனுஸ் கோடி தொடருந்து நிலையங்கள் இணைக்கப்பட்டன.

இதேவேளை புதிய பாதை மற்றும் தொடருந்து வழி அமைப்புக்களின்போது கப்பல்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வகையில் பாலங்கள் மற்றும் நீருக்கடியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்றும் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திட்டங்கள் தொடர்பாக இந்திய தரப்பில் இருந்து இன்னும் இறுதித் தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.