தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வடகொரியா! அதிகரிக்கும் இராணுவ சேர்க்கை
உலகில் சர்வாதிகார ஆட்சியில் இயங்கிவரும் வடகொரியா, தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் தனது சட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், வடகொரியா – தென் கொரியா இடையே மோதல்கள் காணப்பட்ட போதிலும் தென் கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, தென் கொரியாவை நாட்டின் பிரதான எதிரியாக அறிவிக்கவும், அமைதியான கொரிய ஒருங்கிணைப்பு என்ற இலக்கை அகற்றவும், வட கொரியாவின் இறையாண்மை வரையறுக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்ற அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார்.
வட கொரிய அரசியலமைப்பு
இதையடுத்து, கடந்த வாரம் வட கொரிய நாடாளுமன்றம் கூடி, அந்நாட்டின் அரசியலமைப்பு மாற்றி அமைத்துள்ளது.
தென் கொரியாவை எதிரி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் காணப்பட்ட தென் கொரியா – வடகொரியாவுக்கு இடையே காணப்பட்ட சாலை மற்றும் தொடருந்து இணைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முதல்முறையாக அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான தனது யோசனையை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போதைய அரசியல் மாற்றம் சர்வதேச வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்ட சர்வதேச வல்லுநர்கள்,
“இதுவரை வடகொரிய ஜனாதிபதி பதவியில் இருந்தவர்கள் இரு கொரிய நாடுகள் இடையே அமைதியையே பேண விரும்பினார்கள்.
எனினும், தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நல்லிணக்கத்தை பேணுவதில் இருந்து விலகிச் செல்கிறார்.
இவ்வாறான நிலையில், திடீரென நடக்கும் இந்த மாற்றங்களுக்கு மூன்று காரணங்கள் காணப்படுகின்றன.
அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தங்கள்
அந்த வகையில் முதலாவதாக, தென்கொரியாவால் எங்கு தனது ஆட்சிக்குப் பாதிப்பு வருமோ என்று கிம் ஜாங் உன்னுக்கு உள்ள அச்சம் மற்றும் மக்கள் தனது வாரிசு அரசியலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துவிடுவார்களோ என்று அஞ்சம்.
இரண்டாவது, தென்கொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வடகொரியா திட்டமிட்டு இருக்கலாம். தென்கொரியாவை எதிரி நாடு என்று வரையறுக்க இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
முன்றாவது, வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமையினால் அணுசக்தி சார்ந்த ஒப்பந்தங்களை அமெரிக்கா உடன் கைச்சாத்திட தென்கொரியா மூலமே செல்ல வேண்டி இருக்கிறது.
இந்த நேரத்தில் தென்கொரியாவை எதிரி நாடாக அறிவித்து எல்லா உறவுகளையும் முறித்தால், நேரடியாக அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சிந்தித்திருக்கலாம்” என சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வட கொரிய இராணுவ சேர்க்கை
இதேவேளை, வட கொரியாவில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் சேர கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தென் கொரியா அதன் ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், தங்களின் எல்லை சாலைகளை சேதப்படுத்தியதாகவும் வட கொரியா குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவம் பதற்றம் அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்கள் வட கொரிய இராணுவத்தில் சேர கையெழுத்திட்டு இருப்பதாக வட கொரிய அரசின் செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.
சர்வதேச மூலோபாய ஆய்வு கழகத்தின் (IISS) தரவுகளின்படி, வட கொரியாவில் தற்போது 12.8 லட்சம் தீவிர இராணுவ வீரர்களும், சுமார் 6 லட்சம் ரிசர்வ் வீரர்களும் உள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவை எதிர்த்து போரிடுவதற்காக முன்வந்த இளைஞர்களை விட தற்போதைய இராணுவ சேர்க்கையானது அதிகரித்து இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.