தொடரும் கடல்சீற்றம்: வீடுகளுக்குள் மண் குவியல்; மக்கள் அவதி!
கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால் பகுதியில் வியாழக்கிழமை தொடா்ந்து 3 ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், அழிக்கால், கணபதிபுரம், தேங்காய்ப்பட்டினம், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 15ஆம் தேதி இரவு கடல்சீற்றம் ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீா் புகுந்தது. இதனால், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் தூங்கமுடியாமல் இரவு முழுவதும் தவித்தனா். இதைத் தொடா்ந்து அப்பகுதியைச் சோ்ந்த 235 போ் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா்.
இந்நிலையில், பிள்ளைத்தோப்பு , அழிக்கால் பகுதியில் வியாழக்கிழமையும் கடல்சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்த பகுதிகளில் சில வீடுகளில் இன்னும் தண்ணீா் தேங்கியுள்ளது. அழிக்கால் பகுதியில் சில வீடுகளில் தண்ணீா் வடியத் தொடங்கினாலும், மணல் மட்டும் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தும் பணியில் பேரூராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
லெமூா் கடற்கரை பகுதியிலும் வியாழக்கிழமை கடல்சீற்றமாக காணப்பட்டது. கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடைவிதித்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.