மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் பிரச்சார பணிகளை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் கூட்டணி
தமிழ் அரசியல் பரப்பிலும் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியினர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ் . மறைமாவட்ட ஆயர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் சக வேட்பாளர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நல்லை ஆதீனத்திற்கு சென்று , குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து ஆயர் இல்லத்திற்கு சென்றவர்கள் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன் , கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து , ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டோம். அவருடனான கலந்துரையாடலின் போது , அவர் தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டதாகவும் , அவர்களின் போக்குகள் மாறி விட்டதாகவும் எம்மிடம் குறைபட்டுக்கொண்டார்.
மேலும் தமிழ் அரசியல் பரப்பில் மாற்றம் ஒன்று நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக சொன்னார்.
அவரை தொடர்ந்து யாழ் . ஆயரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினோம். அவரும் முற்று முழுதான மாற்றத்தையே விரும்புகிறார். நாமும் அதனை வரவேற்று , எமது வேட்பாளர்கள் தொடர்பிலும் அவர்களின் தகைமைகள் ஆளுமைகள் தொடர்ப்பில் எடுத்து கூறி இருந்தோம்.
மத தலைவர்கள் போன்று தமிழ் மக்களும் மாற்றத்தையே விரும்புகிறார்கள். அதனால் எமக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மணிவண்ணன் தெரிவித்தார்.
மேலும் மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்றைய தினம் தினம் முதல் எமது கட்சியினர் பிராச்சர பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.