;
Athirady Tamil News

நடுவானில் விமானிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சிக்கல்

0

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது.

செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்புக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 607 இன் விமான கேப்டன் ஒருவர் தனது துணை விமானியை விமானி அறைக்கு வர அனுமதிக்காத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுள் திரும்பிய பிறகு கேப்டன் கதவைத் திறக்கவில்லை என கூறப்படுபடுகிறது.

இதன் காரணமாக இதுவரை ஏழு நட்சத்திரங்களாக இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெரும் அவமதிப்பு
சம்பவம் தொடர்பில் இலங்கை விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதிலும் இந்த சம்பவத்தின் மூலம் சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெரும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த விமானம் கொழும்பில் தரையிறங்கிய பின்னர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட விமானி சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு பிரிவு மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மனித வள முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், கேப்டனின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பான சுயாதீன விசாரணைகள்

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இரண்டு விசாரணைகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தாலும் மற்றொன்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையாலும் நடத்தப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவையின் பொதுத் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் அடிப்படையில் ஆசியாவின் பழமையான விமான சேவை நிறுவனமாக கருதப்படும் ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் பல சிக்கல்களை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் சர்வதேச விமான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் எனவும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையின் பின்னர் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையால் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.