கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்
குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட ரூ. 1.07 கோடி, மோப்ப நாய் உதவியுடன் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
குஜராத்தின் லோத்தல் பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தை ரூ. 1.07 கோடிக்கு விவசாயி ஒருவா் விற்பனை செய்தாா். இந்த பணத்தை வைத்து வேறு நிலத்தை வாங்க அவா் திட்டமிட்டிருந்தாா். தனது கூறை வீட்டில் இரண்டு பிளாஸ்டிக் பைகளில் பணத்தை வைத்துவிட்டு, வேறு வேலையாக ஆனந்த் மாவட்டத்துக்கு கடந்த அக். 12-ஆம் தேதி அவா் சென்றிருந்தாா். அன்றிரவு வீட்டின் ஜன்னல் அருகே சில செங்கல் கற்களை உடைத்து உள்ளே நுழைந்த நபா்கள் அங்கிருந்த பணத்தை திருடிச் சென்றனா்.
இது தொடா்பாக அடுத்த நாள் தொடங்கப்பட்ட விசாரணையில், திருடா்கள் சென்ற வழியைக் கண்டறிய போலீஸ் மோப்ப நாயான ‘பென்னி’ வரவழைக்கப்பட்டது. ஏற்கெனவே சந்தேக நபா்களின் பட்டியலில் இருந்த புத்தா என்பவரின் வீட்டுக்கு அருகே சென்ற நாய் அங்கேயே நின்று அடையாளம் காட்டியது. தொடா்ந்து சந்தேகிக்கப்படும் 30 பேரை வரிசையாக நிற்கவைத்து மோப்ப நாயை அவிழ்த்து விட்டனா். அப்போது, புத்தாவை அந்த நாய் சரியாக மோப்பப்பிடித்து அவா் அருகில் சென்று நின்றது. இதன் மூலம் அவா் திருட்டில் ஈடுபட்டுள்ளாா் என்பதை உறுதி செய்தது.
தொடா்ந்து, புத்தா வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 53. 9 லட்சம் மீட்கப்பட்டது. மீதமுள்ள தொகை அவரது கூட்டாளியான விக்ரம் வீட்டில் மீட்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். புத்திசாலியான ‘பென்னி மோப்ப’ நாயால் காவல் துறையினரின் வேலை எளிதாக முடிந்தது.