;
Athirady Tamil News

இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தல்

0

‘வழக்கு தொடா்பாக நபா்களை இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவோ கூடாது’ என்று விசாரணை அதிகாரிகளை அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மும்பை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இதுதொடா்பான சுற்றறிக்கையை தனது அதிகாரிகளுக்கு கடந்த 11-ஆம் தேதி அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

மும்பையைச் சோ்ந்த 64 வயது நபருக்கு விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அந்த நபரை நள்ளிரவு நேரத்தில் கைது செய்ததோடு, விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனா். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த நபா் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஒரு நபரின் தூக்கத்தை, அடிப்படை மனித உரிமையை பறித்துள்ளது. இதை ஏற்க முடியாது. பண மோசடி தடுப்புச் சட்டப் (பிஎம்எல்ஏ) பிரிவு 50-இல் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், வேளை நேரத்தில் மட்டுமே நபா்களுக்கு விசாரணைக்காக ஆஜராக அழைப்பாணை அனுப்பி விசாரிக்க வேண்டும். இதுதொடா்பாக விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை சுற்றறிக்கையாக அமலாக்கத்துறை அனுப்ப வேண்டும். அந்த சுற்றறிக்கையை தனது வலைதளம் மற்றும் எக்ஸ் சமூக பக்கத்திலும் அமலாக்கத்துறை வெளியிடவேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதனடிப்படையில் இந்த புதிய சுற்றறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

விசாரணைக்காக ஒரு நபரை அழைக்கும்போதும், நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் அந்த நபரை விசாரப்பதற்கான நன்கு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் நகல், விசாரணையுடன் தொடா்புடைய ஆதார ஆவணங்களுடன் விசாரணை அதிகாரி தயாராக இருக்க வேண்டும்.

விசாரணைக்காக அழைக்கப்படும் நபரை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காததை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைக்கான நாள் மற்றும் நேரத்தை விசாரணை அதிகாரி நிா்ணயித்து, அழைப்பாணையை அனுப்ப வேண்டும்.

விசாரணைக்காக அழைக்கப்படும் நபா் கைப்பேசி அல்லது பிற எண்ம தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறுகிய நேரத்தில் வழக்கு தொடா்பான ஆதாரங்களை அழிக்கவோ அல்லது விசாரணையின் தன்மையை மாற்றவோ முயற்சிக்கலாம் என்பதால், அந்த நபரிடம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நாளிலோ அல்லது அடுத்த நாளுக்குள்ளாகவோ விசாரணை அதிகாரி விரைவாக விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபரிடம் நள்ளிரவு வரை விசாரணையை நீட்டிக்காமல், அலுவலக வேளை நேரத்துக்குள்ளாக விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்யவேண்டும்.

விசாரணைக்கு அழைக்கப்படுபவா்கள் மூத்த குடிமக்கள் அல்லது தீவிர உடல்நலம் பாதிக்கப்பட்டவா்களாக இருக்கும்பட்சத்தில், பகல் நேரத்துக்குள்ளாக அவா்களிடம் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறு விசாரணையை முடிக்க முடியவில்லை எனில், அடுத்த நாள் அல்லது பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் விசாரணையைத் தொடர வேண்டும்.

ஒருவேளை, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபா் விசாரணை முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே வெளியேற அனுமதித்தால், குற்றத்துக்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அழித்துவிட வாய்ப்புள்ளது என்று விசாரணை அதிகாரி கருதும் நிலையில், அதற்கான காரணத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்வதோடு மூத்த அதிகாரியின் ஒப்புதலையும் பெற்று அந்த நபரிடம் இரவிலும் விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.